மகன்களைக் கொன்றுவிட்டு ரயில் முன்பு பாய்ந்து அரசு அதிகாரி தற்கொலை!
மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தில் அரசு வருவாய் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்த அஜய் தாக்கட், தனது இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராய்சன் மாவட்டத்தில் வருவாய் அதிகாரியாகப் பணியாற்றி வந்த அஜய் தாக்கட், தனது குழந்தைகளிடம் திரைப்படம் பார்ப்பதாகக் கூறி அவர்களைக் காரில் அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், பாதியில் குழந்தைகளைக் காரிலேயே வைத்துத் தனது கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளார்.
அவர்களது கழுத்தை நெரித்து இரு குழந்தைகளையும் கொன்ற அவர், அவர்களின் உடல்களைக் காரின் உள்ளேயே மறைத்து வைத்துள்ளார். அதன் பிறகு, பிபாரியா ரயில் நிலையம் அருகே வந்து அப்பகுதியில் சென்ற சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரயில் முன்பு பாய்ந்து இறந்த அதிகாரியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது காரைச் சோதனையிட்டபோது உள்ளே இறந்து கிடந்த இரண்டு குழந்தைகளின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. குடும்பப் பிரச்சினை காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
