2 மகன்களைக் கொன்று விட்டு அரசு அதிகாரி ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை!

 
தண்டவாளம் தற்கொலை ரயில்முன் பாய்ந்து

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டத்தில், அரசு வருவாய் அதிகாரியான அஜய் தாக்கட் என்பவர் தனது இரண்டு மகன்களைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் ராய்சன் மாவட்டம் உதய்புரா அருகே உள்ள அலிகஞ்ச் கிராமத்தைச் சேர்ந்தவர் அஜய் தாக்கட். இவர் உதய்புராவில் அரசு வருவாய் அதிகாரியாகப் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில், அஜய் தனது மகன்களான சிவம் (14) மற்றும் சரத் (11) ஆகியோருடன் வசித்து வந்தார். இவர்களுடன் அஜய்யின் மாமனார் பிரதாப்சிங்கும் உடன் வசித்து வந்துள்ளார்.

தண்டவாளம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஜய் தனது இரண்டு மகன்களையும் காரில் திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. இதற்கிடையே, ராய்சன் மாவட்டத்தில் உள்ள பிபாரியா ரயில் நிலையத்திற்குச் சென்ற அஜய், அங்குள்ள வாகன நிறுத்தத்தில் தனது காரை நிறுத்திவிட்டு ரயில் நிலையத்திற்குள் சென்றுள்ளார். அங்கு வந்த சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு அவர் திடீரெனப் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த அஜய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த ரயில்வே காவல்துறையினர் அஜய்யின் உடலைக் கைப்பற்றியதுடன், ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவரது காரையும் சோதனையிட்டனர். அப்போது, காரில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் அஜய்யின் இரண்டு மகன்களின் சடலங்களும் கிடப்பதைக் கண்டு காவல்துறையினர் அதிர்ச்சியடைந்தனர்.

தண்டவாளம்

போலீசாரின் விசாரணையில், அஜய் தனது இரண்டு மகன்களையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டு, அந்தச் சடலங்களை காரிலேயே வைத்துவிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருப்பினும், தந்தை தனது சொந்தக் குழந்தைகளைக் கொன்றுவிட்டு இந்த விபரீத முடிவை எடுப்பதற்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்துப் பிபாரியா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.