நெருக்கடிக்கு மத்தியில் உள்நாட்டிலேயே கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்!
சர்வதேச சந்தை நெருக்கடிகள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தவிர்க்கும் வகையில், இறக்குமதியைச் பெருமளவில் குறைத்து சொந்த நாட்டிலேயே கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியா தனது ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் அதிகமான பகுதியை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதையே நம்பியுள்ளது. இதனால் நாட்டின் அன்னியச் செலாவணி பெருமளவில் வெளியேறுவதுடன், மேற்கு ஆசியப் போர்ச்சூழல் மற்றும் சர்வதேச புவிசார் அரசியல் பதற்றங்களால் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையும் பணவீக்கமும் அதிகரிக்கிறது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் தடையின்றித் தொடரச் செய்யும் நோக்கில், நாட்டின் தரைப்பகுதிகள் மற்றும் ஆழ்கடல் பகுதிகளில் புதிய எண்ணெய் கிணறுகளைக் கண்டறிந்து அகழ்வாராய்ச்சிப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிட மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும்போது, எரிசக்தித் துறையில் இந்தியா சுயசார்பு அடைவதுடன், நுகர்வோருக்குச் சீரான விலையில் எரிபொருட்கள் கிடைக்க வழிவகை ஏற்படும் என அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
