“கோவை குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டோர் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்” - வானதி சீனிவாசன்

 
வானதி சீனிவாசன்

கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த 58 அப்பாவி மக்களின் குடும்ப வாரிசுகளுக்கும், தமிழக அரசு சமமான அணுகுமுறையுடன் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்க வேண்டும் என்று பாஜக தேசிய மகளிர் அணித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

கோவை குண்டுவெடிப்புப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டித் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள வானதி சீனிவாசன், கரூரில் அண்மையில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டக் கூட்ட நெரிசலில் சிக்கி எதிர்பாராதவிதமாக உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்குக் கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கத் தவெக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

கரூர் விஜய்

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைப் போலவே, பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஆளாகிப் பெரும் துயரத்தைச் சந்தித்த கோவை குண்டுவெடிப்பு உயிரிழந்தோரின் குடும்ப வாரிசுகள் 58 பேருக்கும் தமிழக அரசு அதே போன்றதொரு சமமான சமூக அணுகுமுறையுடன் அரசுப் பணி வழங்கி உரிய வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு அமைந்துள்ள சூழலில், பல்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த பேரிடர்கள் மற்றும் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் அரசு உதவிகளில் உள்ள அசாத்திய முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சிகள் தங்களது தொடர் அரசியல் அழுத்தங்களை அரசை நோக்கித் திருப்பத் தொடங்கியுள்ளன.