சுங்கச்சாவடி அருகே வசிக்கும் உள்ளூர்வாசிகளுக்கு வருடாந்திர ‘பாஸ்’ - மத்திய அரசு புதிய திட்டம்!

 
சுங்கச்சாவடி

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை ஒட்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் உள்ளூர்வாசிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் புதுப்பிக்கும் வகையில் புதிய வருடாந்திர ‘பாஸ்’ திட்டத்தை மத்திய அரசு வடிவமைத்து வருகிறது.

தற்போது சுங்கச்சாவடியைச் சுற்றி 20 கி.மீ. சுற்றளவில் வசிக்கும் உள்ளூர்வாசிகள், சொந்த வாகனங்களுக்கு மாதம் தோறும் ரூ.350 செலுத்தி டிஜிட்டல் பாஸ் பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் இதனைப் புதுப்பிப்பதில் உள்ள சிரமங்களைக் தவிர்க்க, இனி ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் புதிய பாஸ்டேக் அடிப்படையிலான வருடாந்திர பாஸ் முறை கொண்டுவரப்படவுள்ளது.

சுங்கச்சாவடி டோல்கேட் நெடுஞ்சாலை போக்குவரத்து நெரிசல்

இந்த புதிய வருடாந்திர பாஸ் கட்டணமாக தோராயமாக ரூ.3,000 நிர்ணயிக்கப்பட உள்ளது. இதன் மூலம் உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு சுங்கக் கட்டணத்தில் சுமார் 28 சதவீதம் வரை சலுகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேலை மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக தினமும் ஒரே சுங்கச்சாவடியைக் கடந்து செல்லும் பொதுமக்களுக்கு இது பெரும் நிம்மதியைத் தரும். மேலும், இத்திட்டத்தினால் சுங்கச்சாவடி நிறுவனங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசே ஏற்று ஈடுசெய்யும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன; இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.