மின்சார அடுப்புகள் மீதான இறக்குமதி வரியைக் குறைக்கும் மத்திய அரசு!

 
குடும்பம் மின்சார அடுப்பு எலெக்ட்ரிக் ஸ்டவ்

மேற்காசியப் போர் பதற்றத்தால் சமையல் எரிவாயு இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கியாஸ் பயன்பாட்டைக் குறைத்து மின்சார அடுப்புகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது.

இந்தியாவின் ஆண்டு எல்.பி.ஜி. தேவையில் 65% வெளிநாடுகளில் இருந்தே பெறப்படுகிறது. இதில் 90% மேற்காசிய நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவதால், அங்குள்ள போர் பதற்றத்தால் கியாஸ் சிலிண்டர் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கியாஸ் மற்றும் விறகு அடுப்புகளை விட மின்சார அடுப்புகளில் சமையல் செய்வதற்கான செலவு மூன்றில் ஒரு பங்கு குறைவு என மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சார அடுப்புகளுக்குத் தேவையான கண்ணாடி, காயில் போன்ற உதிரி பாகங்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை உள்நாட்டிலேயே தயாரிக்கத் திட்டமிடுவதுடன், உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியைக் குறைக்கவும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மின்சார அடுப்புகளுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜி.எஸ்.டி. வரியை 5% ஆகக் குறைக்கக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்தியாவில் தற்போது ஆண்டுக்கு 1 கோடி மின்சார அடுப்புகள் தயாரிக்கப்படும் நிலையில், வருங்காலத் தேவையைக் கருதி உற்பத்தியை 2 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.