GPS பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் ஏற்ற தடை... இன்று முதல் உடனடி அமல்!

 
லாரி

 

தமிழகத்தில் கனிம வளங்களை முறைகேடாக கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், ஜி.பி.எஸ். கருவி பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்ற இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு முறைகேடாக கொண்டு செல்லப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதனைத் தடுக்கும் வகையில், கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த வேண்டும் என தமிழக கனிம வளத்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்காக லாரி உரிமையாளர்களுக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

இந்த கால அவகாசம் நேற்று நிறைவடைந்த நிலையில், இன்று முதல் ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட லாரிகளில் மட்டுமே கனிம வளங்களை ஏற்றிச் செல்ல அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கனிம வளங்களை ஏற்றிச் செல்ல சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் லாரிகள் பதிவு செய்துள்ளன. ஆனால் இதுவரை சுமார் 24 ஆயிரம் லாரிகளில் மட்டுமே ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதாக கனிம வளத்துறை தெரிவித்துள்ளது. இதனால் மீதமுள்ள லாரி உரிமையாளர்கள் உடனடியாக ஜி.பி.எஸ். கருவியை பொருத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஜி.பி.எஸ். கருவி இல்லாத லாரிகளுக்கான அனுமதி சீட்டு எனப்படும் டிரிப் ஷீட் ரத்து செய்யப்படும் எனவும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதனால் அனுமதி இல்லாமல் கனிம வளங்களை ஏற்றிச் செல்ல முடியாது.ஜல்லி மற்றும் எம்-சாண்ட் மட்டுமின்றி கருங்கல், மணல் உள்ளிட்ட கனிம வளங்களையும் ஜி.பி.எஸ். இல்லாத லாரிகளில் ஏற்றிச் செல்ல அனுமதி கிடையாது. விதிகளை மீறி கனிம வளங்களை கொண்டு செல்வது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கனிம வளத்துறை தெரிவித்துள்ளது.

ஜி.பி.எஸ். பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம்-சாண்ட் ஏற்ற தடை! இன்று முதல் அமல் Ban on loading gravel, M-sand in trucks not fitted with GPS! Effective from today

கனிம வளங்களை முறைகேடாக வெட்டி எடுத்தல் மற்றும் வெளிமாநிலங்களுக்கு கடத்துவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கனிம வளங்களை கொண்டு செல்லும் நடைமுறைகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளும் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனால் ஜல்லி, எம்-சாண்ட், மணல் உள்ளிட்ட கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரி உரிமையாளர்கள் தங்களது வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.