தமிழகம் முழுவதும் நவ.1ல் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம்!
வரும் நவம்பர் 1-ஆம் தேதி உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை மிகச் சிறப்பாக நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அதிகாரப்பூர்வ உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் அமுதவல்லி, மாநிலத்தின் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் விரிவான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதன்படி, வரும் நவம்பர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சியின் எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையைப் பின்பற்றி கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தொழிலாளர் நலன், இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு, ஊராட்சியின் வரவு செலவு கணக்குகள் மற்றும் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு புதிய பொருட்கள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளன.
கிராம சபைக் கூட்டங்கள் எந்தவொரு மதச்சார்புள்ள வழிபாட்டுத் தலங்களிலும் நடத்தப்படக் கூடாது. பொதுவான இடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். இது தமிழக அரசின் மதச்சார்பற்ற நிர்வாகத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களின் வருகையைக் குறைவெண் வரம்பின்படி உறுதி செய்ய வேண்டும். மேலும், கூட்ட நிகழ்வுகள் அனைத்தையும் உடனுக்குடன் ‘நம்ம கிராம சபை’ கைப்பேசி செயலியில் உள்ளீடு செய்து, அன்றைய தினமே அறிக்கையை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
தங்கள் ஊராட்சியில் என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, வரப்பெற்ற நிதி மற்றும் செலவின விவரங்களை பொதுமக்கள் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாகும். எனவே, கிராமப்புற மக்கள் இந்த ஜனநாயக அதிகாரப் பகிர்வில் நேரடியாகப் பங்கேற்கும் வகையில், நவம்பர் 1 காலை 11 மணிக்கு நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
