பேத்தியை வளர்த்தற்காக மகனிடம் ரூ.45 லட்சம் கேட்ட பாட்டி - சீனாவில் அதிர்ச்சி!

 
தாத்தா பாட்டி பாசம்

சீனாவின் ஷாங்காய் நகரில் பாட்டி ஒருவர் தனது பேத்தியை வளர்த்ததற்கான செலவுத் தொகையைக் கேட்டு மகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த சம்பவம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த சூ (60) என்ற பாட்டி, தனது மகன் தனது மனைவியை விவாகரத்து செய்த பிறகு, அப்பொழுது 4 வயதாக இருந்த பேத்தியை கடந்த 15 ஆண்டுகளாகத் தன் பராமரிப்பில் வளர்த்து வந்துள்ளார். பேத்தியின் உணவு, உடை, கல்வி மற்றும் மருத்துவச் செலவுகள் அனைத்தையும் அந்த பாட்டியே முழுமையாக ஏற்றுள்ளார்.

இதற்கிடையில் மகனும் மறுமணம் செய்து கொண்டு தனியாகச் சென்றுவிட்ட நிலையில், பேத்தி தொடர்ந்து பாட்டியின் பாதுகாப்பிலேயே வளர்ந்து வந்துள்ளார். பேத்தியை வளர்ப்பதற்காகத் தான் செலவிட்ட தொகையைக் கேட்டு, தனது சொந்த மகனுக்கு எதிராகவே பாட்டி நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதன்படி சுமார் 3.6 லட்சம் யுவான், அதாவது இந்திய மதிப்பில் ஏறத்தாழ ரூ.45 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று அவர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.