அதிர்ச்சி... இறந்த தாயின் உடலை வைத்து நாட்கணக்கில் பூஜை செய்த மகன்...பார்க்க வந்த பேத்தி பேரதிர்ச்சி!
கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள குளத்துப்புழா பகுதியில் 90 வயதான சின்னத்தம்மா என்ற மூதாட்டி தனது மகன் கிருஷ்ணசாமியுடன் வசித்து வந்தார். வயது முதிர்வு காரணமாகப் படுக்கையிலேயே இருந்த சின்னத்தம்மா, கடந்த சில நாட்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாகத் திடீரென மரணமடைந்துள்ளார். தாயின் மரணத்தை ஏற்றுக்கொள்ள முடியாத மகன் கிருஷ்ணசாமி, அதுகுறித்து உறவினர்களுக்கோ அல்லது அக்கம் பக்கத்தினருக்கோ தெரிவிக்காமல் ரகசியமாக மறைத்துள்ளார். சடலத்தில் இருந்து துர்நாற்றம் வீசாமல் இருக்கத் தினமும் ஈரத்துணியால் உடலைத் துடைத்துப் பவுடர் பூசி வெள்ளைத் துணியால் மூடிப் பராமரித்து வந்துள்ளார்.
தாயின் சடலத்தை தெய்வமாக நினைத்த கிருஷ்ணசாமி, உடலின் முன்னே நின்று தினமும் பல்வேறு பூஜைகள் மற்றும் சடங்குகளைச் செய்து வழிபட்டு வந்துள்ளார். இந்தச் சூழலில் கிருஷ்ணசாமியின் மகள் தனது பாட்டியை நேரில் பார்ப்பதற்காகத் திடீரென வீட்டிற்கு வருகை தந்துள்ளார். வீட்டின் உள்ளே பாட்டி சடலமாகக் கிடப்பதையும் தந்தை பூஜை செய்வதையும் கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அலறியடித்துக் காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த குளத்துப்புழா காவல் துறையினர், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
காவல் துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், மகன் கிருஷ்ணசாமி கடுமையான மனநலப் பாதிப்பிற்கு உள்ளாகியிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனையடுத்துச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த அதிகாரிகள், கிருஷ்ணசாமியை மீட்டு உரிய மருத்துவச் சிகிச்சைக்காக மனநலக் காப்பகத்தில் அனுமதித்தனர். தாயின் சடலத்திற்கு நாட்கணக்கில் பவுடர் பூசி மகன் பூஜை செய்து வந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
