பெரும் சோகம்.. மின்சார ரயில் மோதி 3 மாற்றுத்திறனாளி சிறுவர்கள் பரிதாப பலி..!

 
ஊரப்பாக்கத்தில் சிறுவர்கள் பலி
தாம்பரம் அடுத்த ஊரப்பாக்கத்தில் ரயில் மோதி மாற்றுத்திறனாளி சிறுவர்கள் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர்கள் விடுமுறைக்காக சென்னை அருகே உள்ள ஊரப்பாக்கம் பகுதியில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு வந்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வழித்தடத்தில் வந்த மின்சார ரயில் 3 சிறுவர்கள் மீது மோதியது. ரயில் மோதியதில் சுரேஷ்(15), ரவி(12), மஞ்சுநாத்(11) ஆகிய 3 சிறுவர்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

உயிரிழந்த 3 சிறுவர்களும் மாற்றுத்திறனாளி ஆவர். இந்த விபத்து தொடர்ச்சியாக சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் ரயில்வே போலீசார் மற்றும் ஊரப்பாக்கம் போலீசாரும் உயிரிழந்த சிறுவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக 30 நிமிடங்களுக்கு மேலாக தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வரக்கூடிய மின்சார ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டில் மின்சார ரயில் மோதி 3 சிறுவர்கள் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகே ரயில் சேவை சீராகும் என்று ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துயர சம்பவம் சிறுவர்க்ளின் உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.