காவல் நிலைய பெண் எஸ்.ஐ. குளியலறையில் சடலமாக மீட்பு! உத்தரப் பிரதேசத்தில் அதிர்ச்சி
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் பெண் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் குளியலறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் காவல்துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரேட்டர் நொய்டாவின் ஜார்ச்சா காவல் நிலையத்தில் பெண் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தவர் ரஷ்மி கௌதம். இவர் குளியலறையில் உயிரிழந்த நிலையில் கிடந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று உடலைக் கைப்பற்றினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணையைத் தொடங்கினர்.
ரஷ்மி கௌதம் உயிரிழந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. அவர் தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.பிரேதப் பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே அவரது மரணத்திற்கான காரணம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
