துயரம்... தாக்குதலில் உயிரிழந்த இந்திய மாலுமிக்கு 2 மாதங்களில் திருமணம்!

 
இந்திய மாலுமி

உக்ரைனின் ஒடெசா துறைமுகக் கடற்கரையில் 'எம்.வி. கோல்டன் லியோ' என்ற சரக்குக் கப்பல் மீது ரஷ்யப் படைகள் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் கேரளாவைச் சேர்ந்த கில் ஜோயன் (26) என்ற இளம் மாலுமி உயிரிழந்தார். அடுத்த இரண்டு மாதங்களில் அவருக்குத் திருமணம் நடைபெறவிருந்த நிலையில், இந்தத் திடீர் விபத்து அவரது குடும்பத்தினரையும் கிராம மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் வெள்ளரிக்குண்டு பகுதியைச் சேர்ந்த கில் ஜோயன், தனது 19-வது வயதில் வணிகக் கடற்படையில் சேர்ந்தார். கடந்த 6 ஆண்டுகளாக மாலுமியாகப் பணியாற்றி வந்த இவர், தனது குடும்பத்தின் ஒரே தூணாக விளங்கி வந்துள்ளார்.

ஹார்முஸ் கப்பல் வணிக ஈரான்

கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் இவருக்கு ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஒரு மாதத்திற்கு முன்புதான் மீண்டும் பணிக்காகத் திரும்பிய இவருக்கு இன்னும் 2 மாதங்களில் திருமணம் நடைபெறவிருந்தது. மின்சாரப் பொருட்கள் கடையில் பணிபுரியும் தந்தை ஜோயன் மற்றும் தாயார் சாலி ஆகியோரின் ஒரே மகனான கில் ஜோயன், சமீபத்தில்தான் தனது குடும்பத்திற்காகப் புதிய வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். மேலும், விரைவில் கப்பல் வேலையை விட்டுவிட்டு வேறு பணிக்கு மாறவும் திட்டமிட்டிருந்தார்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா-பிசாவின் கொடியுடன், உக்ரேனிய மக்காச்சோளத்தை ஏற்றிச் சென்ற அந்தச் சரக்குக் கப்பல் மீது ஞாயிற்றுக்கிழமை ரஷ்யப் படைகள் அதிரடித் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இந்தியர்கள், சிரியாவைச் சேர்ந்த 5 மாலுமிகள் உட்பட மொத்தம் 10 கப்பல் பணியாளர்கள் உயிரிழந்தனர். 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

ஹார்முஸ் கப்பல்

கில் ஜோயன் உயிரிழந்த தகவலை அவர் பணிபுரிந்த கப்பல் நிறுவனம் திங்கள்கிழமை மாலை மின்னஞ்சல் மூலம் குடும்பத்தினருக்கு உறுதிப்படுத்தியது. மாலுமி கில் ஜோயனின் உடலைத் தாயகம் கொண்டு வருவதற்காக வெளிநாடு வாழ் கேரள மக்கள் விவகாரங்கள் துறைக்குக் கேரள முதலமைச்சர் அலுவலகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. ரஷ்யத் தூதரகம் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சகத்துடன் ஒருங்கிணைந்து, உடலை விரைவாக மீட்டுக் கொண்டு வரத் தேவையான அனைத்துப் பணிகளையும் கேரளா அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.