துயரம்... 'டோலி' கட்டி கர்ப்பிணியை தூக்கிச் சென்ற கிராம மக்கள்!

 
டோலி கட்டி கர்ப்பிணி

நாடு டிஜிட்டல் மயமாகவும், உள்கட்டமைப்பில் அதிவேகமாகவும் வளர்ந்து வருவதாகக் கூறப்படும் வேளையில், மகாராஷ்டிர மாநிலத்தில் சாலை வசதி இல்லாத காரணத்தால் பிரசவ வலியால் துடித்த ஒரு பழங்குடியின கர்ப்பிணிப் பெண்ணைத் துணியால் 'டோலி' கட்டி, கிராம மக்கள் ஆபத்தான காட்டுப் பாதையில் பல கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்ற நெஞ்சை உலுக்கும் அவலச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மகாரஷ்டிர மாநிலம், ராய்காட் மாவட்டம் உம்பரானே வாடி என்ற மலைக் கிராமத்தில் இந்த அதிர்ச்சிச் சம்பவம் நடந்துள்ளது:

உம்பரானே வாடி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரெனப் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவசரச் சிகிச்சைக்கு ஆம்புலன்ஸை அழைக்க முயன்றபோது, கிராமத்திற்கு முறையான சாலை வசதி இல்லாததால் வாகனங்கள் வர முடியாது எனத் தெரியவந்தது.

இதனால் மாற்று வழி தெரியாமல் தவித்த கிராம மக்கள், உடனடியாக ஒரு படுக்கை விரிப்பை (Bed sheet) எடுத்து மூங்கில் கம்பில் கட்டி தற்காலிக 'டோலி' ஒன்றை உருவாக்கினர். பின்னர், பிரசவ வலியால் துடித்த அந்தப் பெண்ணை அதில் படுக்க வைத்து, இரண்டு இளைஞர்கள் தங்களது தோள்களில் சுமந்து கொண்டு ஓடத் தொடங்கினர்.

கொட்டும் மழையில் கரடுமுரடான காட்டுப்பாதைகள், செங்குத்தான மலைச் சரிவுகள் மற்றும் வழுக்கும் பாறைகள் நிறைந்த காட்டோடைக் கால்வாய்களைக் கடந்து, உயிரைப் பணயம் வைத்துப் பல கிலோமீட்டர் தூரம் தூக்கிச் சென்றனர். ஒரு வழியாகக் கிராம மக்கள் அந்தப் பெண்ணை அருகில் உள்ள அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அனுமதித்தனர். அங்கு தற்பொழுது அந்தப் பெண்ணிற்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த உம்பரானே வாடி கிராமம் மட்டுமல்லாமல், அதனைச் சுற்றியுள்ள மேலும் 3 பழங்குடியின மலைக் கிராமங்களுக்கும் (மொத்தம் 4 கிராமங்கள்) இன்று வரை முறையான எந்தவொரு சாலை இணைப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. "எங்கள் கிராமங்களில் யாருக்காவது உடம்பு சரியில்லை என்றாலோ அல்லது அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டாலோ, இன்று வரை அவர்களை இப்படித் தோளில் சுமந்து கொண்டு ஓடும் அவலநிலைதான் தொடர்கிறது. சாலை, குடிநீர், மின்சாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்காக நாங்கள் பல ஆண்டுகளாக அரசுக்குக் கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால் எந்தவொரு அதிகாரியும் எங்கள் குறைகளைக் காது கொடுத்துக் கேட்பதில்லை" என்று அப்பகுதி கிராம மக்கள் கூறுகின்றனர்.

கர்ப்பிணிப் பெண்ணை ஆபத்தான பாதையில் டோலி கட்டி சுமந்து செல்லும் இந்த 2 நிமிடக் காட்சி, அங்குச் சென்ற ஒருவரால் வீடியோ எடுக்கப்பட்டு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. "2026-ஆம் ஆண்டிலும் இப்படியான ஒரு அவலநிலையா?" என நெட்டிசன்கள் பலரும் மகாரஷ்டிர மாநில அரசை நோக்கிக் காரசாரமான கேள்விகளை எழுப்பி, தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.