ரேஷன் கடைகளில் மொத்தமா மாறுது... இனி 'பாக்கெட்' முறையிலான பொருட்கள் விநியோகம்!
ரேஷன் கடைகளில் நிலவி வரும் எடைக்குறைவு, தரக்குறைவு மற்றும் கடத்தல் உள்ளிட்ட முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அரிசி தவிர்த்து மற்ற அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகிக்கும் புதிய திட்டத்தைத் தமிழக வெற்றிக் கழக அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் பொருட்களில் சில நேரங்களில் எடைக்குறைவு, கலப்படம் செய்யப்படுவதாகவும், தரமற்ற பொருட்கள் விநியோகிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் தரப்பில் தொடர் புகார்கள் எழுந்து வந்தன.

இதனைத் தடுத்து, பொதுமக்களுக்குத் துல்லியமான எடையில், தரமான பொருட்கள் நேரடியாகச் சென்றடைவதை உறுதி செய்ய, "அரிசி தவிர்த்து மற்ற அனைத்துப் பொருட்களும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படும்" என்று தவெக தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது.
தற்போது தவெக தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள சூழலில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் தரப்பில் விரிவான ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் துவரம்பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் (அரிசி நீங்கலாக) அனைத்தும் ஆலைகளிலேயே தரமான முறையில் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தை மாநிலம் முழுவதும் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை மற்றும் முக்கிய அறிவிப்புகள் முதலமைச்சர் விஜய் தலைமையில் விரைவில் வெளியாகும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் ரேஷன் கடத்தல்களும், எடை மோசடிகளும் முற்றிலுமாகத் தடுக்கப்படும் என்பதால் பொதுமக்கள் மத்தியில் இதற்குப் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
