தரைமட்டமான கட்டிடம்... நகை பட்டறையில் சிலிண்டர் வெடித்து 5 பேர் பலி!
சென்னை சவுகார்பேட்டையில் உள்ள நகை பட்டறை ஒன்றில் நிகழ்ந்த சிலிண்டர் வெடிப்பு விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை சவுகார்பேட்டை, போயஸ் சாலை பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இயங்கி வந்த நகை செய்யும் பட்டறையில், நேற்று முன்தினம் இரவு எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இந்த விபத்தில் நகை பட்டறையின் உரிமையாளர் சுமன் பால் சோகித், ஸ்ரீமந்தம்மால் (47) மற்றும் ராகேஷ் (26) ஆகியோர் ஏற்கனவே உயிரிழந்தனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சூரஜ் (23) மற்றும் அரவிந்த் (27) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
சிலிண்டர் வெடித்த வேகத்தில் அந்த அறையின் சுவர்கள் இடிந்து விழுந்தன. பட்டறையில் இருந்த ரசாயனங்கள் மற்றும் எரிவாயு காரணமாகத் தீ வேகமாகப் பரவியது. இது சாதாரண விபத்தா அல்லது ஏதேனும் சதி வேலை காரணமா என்ற கோணத்தில் யானைக்கவுனி போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் நெரிசல் மிகுந்த சவுகார்பேட்டை பகுதியில், பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் நகை பட்டறைகள் இயங்குவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இந்த பட்டறைக்கு முறையான அனுமதி இருந்ததா என்பது குறித்தும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
உயிரிழந்தவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் எனக் கூறப்படுகிறது. அவர்களது உடல்களைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சவுகார்பேட்டை போன்ற குறுகிய தெருக்கள் கொண்ட பகுதிகளில் இது போன்ற விபத்துகள் ஏற்படும் போது தீயணைப்பு வாகனங்கள் உள்ளே செல்வதில் சிக்கல் இருப்பதை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
