GST Council Meeting: நிர்மலா சீதாராமன் தலைமையில் அக்டோபர் 8-ல் கூட்டம்! வரப்போகும் முக்கிய மாற்றங்கள் என்ன?
ஜிஎஸ்டி கவுன்சிலின் 57-வது கூட்டம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், ஜிஎஸ்டி நடைமுறைகளை எளிமைப்படுத்துவது தொடர்பான பல்வேறு முக்கிய சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் முதலில் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம் அக்டோபர் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுடெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜிஎஸ்டி வரி விகிதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யப்பட்ட நிலையில், இந்தக் கூட்டத்தில் புதிய வரி விகித மாற்றங்களை மேற்கொள்வதைவிட நடைமுறை சார்ந்த சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ஜிஎஸ்டி பதிவு நடைமுறை, ரிட்டர்ன் தாக்கல், வரி திருப்பிச் செலுத்தும் நடைமுறை, உள்ளீட்டு வரிக் கடன் (ITC) தொடர்பான விதிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், வரி செலுத்துவோருக்கான இணக்க நடைமுறைகளை எளிதாக்குவது, ஜிஎஸ்டி தொடர்பான சர்ச்சைகளை குறைப்பது மற்றும் வரி நிர்வாகத்தை மேலும் சீர்படுத்துவது தொடர்பான திட்டங்களும் பரிசீலிக்கப்பட உள்ளன.
இதற்கு முன்பு, அக்டோபர் மாத கூட்டத்தில் ‘GST 2.0’ கீழ் நடைமுறை சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். குறிப்பாக இ-இன்வாய்சிங் மற்றும் Input Tax Credit விதிகள் தொடர்பான மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்தப்படலாம் என அவர் கூறியிருந்தார்.
இதனால், வர்த்தக நிறுவனங்கள், தொழில்முனைவோர் மற்றும் ஜிஎஸ்டி செலுத்தும் வரி செலுத்துவோர் மத்தியில் இந்தக் கூட்டத்தின் முடிவுகள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
கூட்டம் முடிந்த பிறகு ஜிஎஸ்டி கவுன்சில் எடுக்கும் முடிவுகள் மற்றும் அதிகாரப்பூர்வ பரிந்துரைகள் வெளியிடப்பட்ட பின்னரே, எந்தெந்த நடைமுறைகளில் மாற்றம் செய்யப்படுகிறது என்பது முழுமையாக தெரியவரும்.
