100 நாள் வேலை செய்யும் பெண்ணுக்கு ரூ.2.79 கோடி ஜிஎஸ்டி நோட்டீஸ் - ஜோலார்பேட்டையில் அதிர்ச்சி!
ஜோலார்பேட்டை பகுதியில் 100 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் தினக்கூலியாக வேலை செய்து வரும் ஏழைப் பெண் ஒருவருக்கு, ரூ. 2.79 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்து, தினசரி கூலி வேலைக்குச் சென்று பிழைப்பு நடத்தி வரும் அந்தப் பெண்ணின் பெயருக்கு, சரக்கு மற்றும் சேவை வரி துறையிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய்க்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு குற்றச்சாட்டால் அப்பெண்ணின் வங்கிக் கணக்கும் முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.

வங்கிக் கணக்கு முடக்கப்பட்டதன் காரணமாக, தான் வியர்வை சிந்தி உழைத்த 100 நாள் வேலைத் திட்டத்திற்கான குறைந்தபட்ச கூலித் தொகையைக் கூட வங்கியிலிருந்து எடுக்க முடியாமல் அவர் மிகுந்த தவிப்பிற்கு ஆளாகியுள்ளார்.
ஜிஎஸ்டி துறையிடம் இருந்து வந்த அந்த நோட்டீஸில், சம்பந்தப்பட்ட பெண்ணின் பெயரில் ‘ஆர்.எம். ட்ரேடர்ஸ்’ என்ற பெயரில் ஒரு வணிக நிறுவனம் இயங்கி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனம் பெருமளவில் வர்த்தகம் செய்துவிட்டு, அரசுக்குச் செலுத்த வேண்டிய வரித் தொகையை ஏய்ப்பு செய்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அப்பாவியான கூலித் தொழிலாளியின் அடையாள ஆவணங்களை யாரேனும் மர்ம நபர்கள் தவறாகப் பயன்படுத்தி, அவர் பெயரில் போலி நிறுவனத்தைத் தொடங்கி கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்துள்ளது.
