அடக்கம் செய்யத் தயாரானபோது திடீரென கண்விழித்த சிறுமி! தண்ணீர் கேட்டதால் அதிர்ந்த குடும்பத்தினர்

 
சிறுமி

மத்திய அமெரிக்க நாடான குவாத்தமாலாவில், உயிரிழந்துவிட்டதாகக் கருதப்பட்ட 15 வயது சிறுமி, அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது திடீரென கண்விழித்து தண்ணீர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

குவாத்தமாலாவைச் சேர்ந்த அந்தச் சிறுமிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது தந்தை சிறுமியை காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமிக்கு மூச்சும் நாடித்துடிப்பும் இல்லை என்று கருதிய தந்தை, அவர் உயிரிழந்துவிட்டதாகத் தவறாக முடிவு செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து சிறுமியை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

சுமார் 8 மணி நேரத்துக்குப் பிறகு, இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிறுமி திடீரென கண்விழித்து தண்ணீர் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்ட குடும்பத்தினரும் அங்கு கூடியிருந்தவர்களும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாகச் சிறுமிக்கு தண்ணீர் கொடுத்து, சவப்பெட்டியிலிருந்து வெளியே எடுக்க உதவினர். இந்தச் சம்பவம் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிலையில், சிறுமியின் உடல்நிலை குறித்த மேலதிக மருத்துவத் தகவல்கள் வெளியாகவில்லை.