குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர வெடிவிபத்து! 5 தொழிலாளர்கள் பலி; 5 பேர் படுகாயம்

 
குஜராத்

 

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 5 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயமடைந்தனர்.

வாக்ரா தாலுகாவில் உள்ள சாய்கா ஜிஐடிசி தொழிற்பகுதியில் மருந்து தயாரிப்புக்கான மூலப்பொருட்களை உற்பத்தி செய்யும் ஆலையில், ஹைட்ரஜனேற்றம் செய்யும் பணியின்போது இந்த வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் ஆலையின் ரியாக்டர் வெடித்துச் சிதறியது.

விபத்தைத் தொடர்ந்து மெத்திலீன் டைகுளோரைடு (எம்டிசி) என்ற நச்சு ரசாயன வாயு கசிந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகவலறிந்த போலீசார், குஜராத் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தொழிற்சாலை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிவிபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.