அரசு மருத்துவமனையின் அவலம்... கணவரின் ஸ்ட்ரெச்சரை தனியாகத் தள்ளிச் சென்ற 70 வயது மூதாட்டி... வைரல் வீடியோ!

 
சென்னை

 

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாய் அரசு மருத்துவமனையில், உடல்நலம் பாதிக்கப்பட்ட கணவரை அழைத்துச் செல்ல 70 வயது மூதாட்டி ஒருவர் தனியாக ஸ்ட்ரெச்சரைத் தள்ளிச் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கணவரை அவசர சிகிச்சைப் பிரிவுக்கு அழைத்துச் செல்ல முயன்றபோது உதவிக்கு யாரும் வரவில்லை எனக் கூறப்படுகிறது. வயது முதிர்வு மற்றும் உடல் சோர்வு காரணமாகத் தடுமாறியபோதும், வேறு வழியின்றி மூதாட்டி ஸ்ட்ரெச்சரைத் தனியாகத் தள்ளிச் சென்ற காட்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மருத்துவமனை கணக்கு அதிகாரி எம்.எஸ். ராய் தெரிவித்துள்ளார். நோயாளிகளுக்கு உதவ வேண்டிய பொறுப்பில் இருந்த தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இனிமேல் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க வழிகாட்டு நடைமுறைகள் வகுக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.