காந்தி புகைப்படத்துடன் சர்ச்சை ரீல்.. 10 லட்சம் Followers கொண்ட பெண் கைது! குஜராத்தில் பரபரப்பு

 
insta

 

 

குஜராத் மாநிலம் சூரத்தில் மகாத்மா காந்தியின் புகைப்படம் இடம்பெற்ற ரூ.500 நோட்டை சர்ச்சைக்குரிய வகையில் பயன்படுத்தி ரீல் வெளியிட்டதாக, சுமார் 10 லட்சம் Instagram Followers கொண்ட பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.சூரத்தை சேர்ந்த 47 வயதான சிம்ரன் படேல் என்ற பெண் சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது Instagram கணக்கில் சுமார் 10 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர்.

அக்டோபர் 1-ம் தேதி, காந்தி ஜெயந்திக்கு முந்தைய நாளில் சிம்ரன் படேல் தனது Instagram கணக்கில் ஒரு ரீலை பதிவிட்டதாக கூறப்படுகிறது. அதில் ரூ.500 நோட்டில் இடம்பெற்றிருந்த மகாத்மா காந்தியின் புகைப்படத்தை ஆட்சேபனைக்குரிய முறையில் பயன்படுத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோவில் ஆட்சேபனைக்குரிய கருத்துகள் மற்றும் சைகைகள் இடம்பெற்றிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த ரீல் தொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சூரத் சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கிடைத்த டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப ஆதாரங்களின் அடிப்படையில் சிம்ரன் படேல் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த வழக்கில் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 67-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த பிரிவு மின்னணு வடிவில் ஆபாசமான உள்ளடக்கத்தை வெளியிடுவது அல்லது பரப்புவது தொடர்பானது.

Gujarat woman with 1 million Instagram followers held over objectionable Gandhi reel

போலீசார் வெளியிட்ட தகவலின்படி, சம்பந்தப்பட்ட ரீல் பின்னர் நீக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சிம்ரன் படேல் போலீசாரிடம் மன்னிப்பு கேட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள், பார்வைகள் மற்றும் பின்தொடர்பவர்களை பெறுவதற்காக ஆட்சேபனைக்குரிய அல்லது சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களை பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என்றும், இதுபோன்ற பதிவுகள் சட்ட நடவடிக்கைக்கு வழிவகுக்கலாம் என்றும் சூரத் போலீசார் எச்சரித்துள்ளனர்.