11 ஆண்டுகள் உழைப்பு… முதல் முறையாக தீபாவளிப் பரிசு! லாரி ஓட்டுநரின் நெகிழ்ச்சி வீடியோ வைரல்

 
லாரி

 

ஒரே நிறுவனத்தில் 11 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நபருக்கு, இந்த ஆண்டு முதன்முறையாக தீபாவளிப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. பரிசுப் பொருட்களைப் பார்த்து அவர் மகிழ்ச்சியுடன் நெகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

குஜராத் மாநிலம் வாபி நகரில் செயல்பட்டு வரும் பஜ்ரானி ஸ்டார் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் சுரேஷ் மவுரியா என்பவர் கடந்த 11 ஆண்டுகளாக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு, அவரது நீண்டகால உழைப்பைப் பாராட்டும் வகையில் நிறுவன நிர்வாகம் பரிசுத் தொகுப்பை வழங்கியுள்ளது.

அந்தப் பரிசுத் தொகுப்பில் ரூ.1,000 ரொக்கம், புதிய சட்டை, பேன்ட், மில்டன் நிறுவனத்தின் டிபன் பாக்ஸ், தண்ணீர் குடுவை மற்றும் ஒரு கிலோ முந்திரி இனிப்பு ஆகியவை இடம்பெற்றிருந்தன.

பரிசுப் பொருட்களை ஒவ்வொன்றாகப் பிரித்துப் பார்த்த சுரேஷ், தனது வாழ்க்கையில் இதுபோன்று பரிசு கிடைப்பது இதுவே முதல் முறை என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. 11 ஆண்டுகளாக உழைத்து வரும் ஊழியரின் சேவையை அங்கீகரித்த நிறுவனத்தின் செயலுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.