கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம் பாலியல் சம்பவங்கள்... வடமாநிலத்தவர் தொடர்புடைய குற்றங்கள் அதிகரிப்பு" - அண்ணாமலை கண்டனம்!

 
அண்ணாமலை அண்ணாமலை

தமிழகத்தில் சமீபகாலமாகக் குற்றச் சம்பவங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகக் கவலை தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் அவர்களின் முழுமையான விவரங்களை அரசுக்கு வழங்குவதைக் கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம் அருகே கட்டுமானப் பணிக்காக வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர், 10 வயது சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபோல, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பகுதியிலும் 3 வயது குழந்தைக்கு வடமாநில நபர் ஒருவர் பாலியல் கொடுமை இழைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. இந்த அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி அண்ணாமலை தனது கண்டனத்தையும், அதுகுறித்த கவலையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இதுதொடர்பாகப் பேசியுள்ள அண்ணாமலை, தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு வெளிமாநிலத் தொழிலாளர்களின் பங்களிப்பு தேவை என்றாலும், அவர்களின் பெயரில் புகுந்துள்ள குற்றப் பின்னணி கொண்டவர்களால் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதையும், தமிழகக் குழந்தைகளுக்கு எதிரான கொடூரங்கள் நடப்பதையும் வேடிக்கை பார்க்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டு வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் அனைத்து தனியார் நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள் மற்றும் சிறுதொழில் கூடங்கள் தங்களது தொழிலாளர்களின் முழு விவரங்களையும், அடையாளச் சான்றுகளையும் உள்ளூர் காவல் நிலையத்திலும், அரசிடமும் சமர்ப்பிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தொழிலாளர்களின் சொந்த மாநிலத்தில் அவர்களுக்கு ஏதேனும் குற்றப் பின்னணி உள்ளதா என்பதைத் தீர விசாரித்து, போலீஸ் சரிபார்ப்புச் சான்றிதழைப் பெற்ற பின்னரே அவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும்.

தமிழகத்தில் வடமாநிலத் தொழிலாளர்களின் வருகை மற்றும் விவரங்களை முழுமையாக முறைப்படுத்தத் தவறியதே இதுபோன்ற தொடர் குற்றங்களுக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டியுள்ள அண்ணாமலை, ஆளுங்கட்சியினர் இந்த விவகாரத்தில் மெத்தனம் காட்டாமல் உடனடியாக உரியக் கண்காணிப்பு விதிமுறைகளை வகுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.