துப்பாக்கி தவறி வெடித்ததில் பாஜக பெண் நிர்வாகி பலி!

 
bjp bjp

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் ரஞ்சி பகுதியைச் சேர்ந்தவர் 38 வயது சங்கீதா ரஜக். இவருக்குப் பகுதி அளவில் பாஜக நிர்வாகியாகப் பொறுப்பு இருந்துள்ளது. கடந்த மே 28ஆம் தேதி இவருடைய வீட்டின் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இக்கொடூர சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், அவர்கள் சிக்காமல் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த அந்தக் கும்பல் மீண்டும் நேற்று முன்தினம் நள்ளிரவில் சங்கீதாவின் வீட்டிற்கு வந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதாவின் கணவர் மற்றும் மைத்துனர் வீட்டின் மேல் தளத்திற்கு ஓடிச் சென்றுள்ளனர். அப்போது தற்காப்பிற்காகத் தனது மைத்துனர் புஷ்பேந்திர ரஜக் பெயரில் இருந்த 12-போர் ரக துப்பாக்கியை அவர்களிடம் கொடுக்க சங்கீதா முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாகத் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் சங்கீதாவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது.

உடனடியாக அவர் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து ரஞ்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து சங்கீதாவின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.