பயணிகள் கவனத்திற்கு... குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாதையில் திடீர் மாற்றம்!

 
எக்ஸ்பிரஸ் ரயில் எக்ஸ்பிரஸ் ரயில்

திருவனந்தபுரம் ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் அத்தியாவசியப் பொறியியல் பணிகள் காரணமாக, திருச்சி வழியாக இயக்கப்படும் குருவாயூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16128) ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குக் கிளம்பும் இந்த ரயில், இன்று (மே 9) முதல் வரும் 26-ஆம் தேதி வரை குறிப்பிட்ட நாட்களில் மாற்றுப் பாதையில் இயக்கப்படும் எனத் தெரிகிறது. இதனால் இந்தப் பாதையில் பயணிக்கும் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தைச் சரிபார்த்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

 சிறப்பு ரயில்

இந்த மாற்றத்தின்படி, மேற்கண்ட ரயில் வழக்கமாகச் செல்லும் எர்ணாகுளம், சேர்த்தலா, ஆலப்புழா, அம்பலப்புழா மற்றும் ஹரிப்பாட் ஆகிய ரயில் நிலையங்களுக்குச் செல்லாது. அதற்குப் பதிலாக, கோட்டையம், சங்கனாசேரி, திருவல்லா மற்றும் செங்கனூர் ஆகிய முக்கிய ரயில் நிலையங்கள் வழியாக இந்த ரயில் திருப்பி விடப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. ரயில்வே பாதைகளைப் பராமரிக்கும் பணிகளுக்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்

ரயில் சேவையில் செய்யப்பட்டுள்ள இந்தத் திடீர் மாற்றம் குறித்த தகவலைத் திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மே 11 முதல் 26-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் இந்த மாற்றுப் பாதை நடைமுறை அமலில் இருக்கும். எனவே, கேரளாவிலிருந்து சென்னை திரும்பும் பயணிகள் மற்றும் தென் மாவட்ட மக்கள் இந்த ரயில் வழித்தட மாற்றத்தைக் கவனத்தில் கொண்டு பயணிக்கக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.