கோயிலுக்குச் சென்ற பக்தர்கள் மீது லாரி மோதல்... 14 பேர் பலி; 40 பேர் காயம்!
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள ஷீதலா மாதா கோயில் அருகே பக்தர்கள் கூட்டத்துக்குள் லாரி புகுந்ததில் 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 40 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (அக். 18) அதிகாலை நிகழ்ந்தது.
ஷீதலா மாதா கோயில் சாலையில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி, அதிகாலை சுமார் 1.30 மணியளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. பின்னர் கோயிலின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கனரக வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டிருந்த சாலையில், காவல்துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி லாரி சென்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
