ஞானேஷ் குமார் விவகாரம்... இன்று உச்ச நீதிமன்றம் நோக்கி காங்கிரஸ் கட்சி பேரணி!
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரின் செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் நடவடிக்கைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குற்றம்சாட்டியும் காங்கிரஸ் கட்சி இன்று உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் செல்லத் திட்டமிட்டுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்றும், வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

ஜனநாயகத்தைப் பாதுகாக்கக் கோரியும், தேர்தல் நடைமுறைகளின் நம்பகத்தன்மையை வலியுறுத்தியும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் டெல்லியில் இன்று பிரம்மாண்டமான பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குகள் விசாரணையில் உள்ள நிலையில், இந்த விவகாரம் தேசிய அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
