H1B விசா கட்டண உயர்வுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை!

 
எச்1பி எச்1பி

அமெரிக்காவில் தங்கிப் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான எச்-1பி விசா கட்டணத்தை அதிபர் டிரம்ப் கடந்த ஆண்டில் சுமார் 96 லட்சம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டிருந்தார். அமெரிக்க நிறுவனங்களில் பணிபுரியும் இந்தியப் பொறியாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்பக் வல்லுநர்கள் உள்ளிட்ட பலரையும் இந்த திடீர் கட்டண உயர்வு பெரும் கவலையிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. டிரம்ப் அரசின் இந்த முடிவுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினரும் அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்து போராடி வந்தனர்.

இந்நிலையில், விசா கட்டணத்தை 1 லட்சம் டாலராக உயர்த்திய அதிபர் டிரம்ப்பின் உத்தரவு முற்றிலும் சட்டவிரோதமானது என்று மசாசூசெட்ஸ் நீதிமன்றம் தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. இத்தகைய சட்டப்பூர்வமற்ற கடுமையான நடவடிக்கைகளைத் தன்னிச்சையாக அமல்படுத்த அமெரிக்க அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெளிவாகத் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, அமெரிக்காவில் வேலை பார்த்து வரும் வெளிநாட்டு ஊழியர்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இந்த முக்கியத் தீர்ப்பின் காரணமாக, எச்-1பி விசா புதுப்பித்தல் மற்றும் புதிய விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய ஊழியர்களின் தலையெழுத்து மாறியுள்ளது. கடந்த சில மாதங்களாக விசா கட்டண உயர்வால் தங்களது வேலைவாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இருந்த நடுத்தர வர்க்க ஐடி ஊழியர்களுக்கு இத்தீர்ப்பு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்கள் தொடர்ந்து திறமையான வெளிநாட்டு ஊழியர்களைக் குறைந்த செலவில் பணியமர்த்தவும் இந்த தீர்ப்பு வழிவகை செய்துள்ளது.