பெங்களூருவில் அதிகம்... கர்நாடகாவில் வேகமாக பரவும் பன்றி காய்ச்சல் - 4,000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

 
h1n1

 

கர்நாடக மாநிலத்தில் கடந்த 8 மாதங்களில் 4,000-க்கும் மேற்பட்டோருக்குப் பன்றி காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.மாநிலம் முழுவதும் 4,125 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகள் பெங்களூருவிலேயே பதிவாகியுள்ளன.

பெருநகர பெங்களூரு மாநகராட்சி எல்லை: 2,033 பேர், பெங்களூரு நகர்: 982 பேர், உடுப்பி: 293 பேர், மைசூரு: 184 பேர், சிவமொக்கா: 91 பேர், தட்சிண கன்னடா: 87 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், வெளியே செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டால் மக்கள் தாங்களாகவே சுய மருத்துவம் எடுத்துக் கொள்ளாமல், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

தொற்று பரவுவதைத் தடுக்க மற்றவர்களுடன் கைகுலுக்குவதைத் தவிர்க்க வேண்டும்; கைகளை அடிக்கடி சோப்பு அல்லது சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும்.வெந்நீர் பருக வேண்டும்; கண்கள் மற்றும் மூக்கைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்; தும்மும் போதும் இருமும் போதும் கைக்குட்டையைப் பயன்படுத்த வேண்டும். தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பன்றி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவது கர்நாடக மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.