ஹைதராபாத்தில் ஆலங்கட்டி மழை... இமயமலை பனிப்பிரதேசம் போல மாறிய சாலைகள்!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று மாலை பெய்த அதீத ஆலங்கட்டி மழை, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. காஷ்மீர் அல்லது இமயமலைப் பிரதேசம் போலச் சாலைகள் முழுவதும் பனிக்கட்டிகளால் நிறைந்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஹைதராபாத் ஷம்ஷாபாத் விமான நிலையப் பகுதி மற்றும் நாடர்குல் இடையிலான வெளிவட்டச் சாலையில் இந்த அபூர்வ நிகழ்வு ஏற்பட்டுள்ளது. சாலை முழுவதும் சில அங்குல உயரத்திற்கு வெள்ளைப் போர்வை போர்த்தியது போல ஆலங்கட்டிகள் குவிந்து கிடந்தன. கோடை வெயில் சுட்டெரிக்கும் நேரத்தில், இத்தகைய காட்சி ஒரு பனிப்பிரதேசத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தந்தது. இதனைப் படம் பிடித்த வாகன ஓட்டிகள், #HyderabadHimalayas என்ற ஹேஷ்டேக் மூலம் வைரலாக்கி வருகின்றனர்.
சாலையில் குவிந்த பனிக்கட்டிகளால் வழுக்கும் தன்மை ஏற்பட்டு, வெளிவட்டச் சாலையில் போக்குவரத்து சற்று மந்தமானது. வாகன ஓட்டிகள் கவனமாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டனர்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகத் தென்னிந்தியாவின் சில பகுதிகளில் இத்தகைய திடீர் இடி, மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த ஆலங்கட்டி மழை வெப்பத்தைத் தணித்தாலும், அருகில் உள்ள கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள மாம்பழங்கள் மற்றும் காய்கறித் தோட்டங்களுக்குச் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
