கோவையில் ஆலங்கட்டி மழை... 15,000 ஏக்கர் பயிர்கள் சேதம் - 20 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு!
கோயம்புத்தூர் மாவட்டத்தின் அன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாகப் பெய்த வரலாறு காணாத ஆலங்கட்டி மழை, விவசாயிகளுக்குப் பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் நிலவி வந்த கடும் வெப்பத்திற்கு மத்தியில், கடந்த மார்ச் 17 முதல் அவ்வப்போது பெய்த கனமழை மற்றும் ஆலங்கட்டி மழை அன்னூர் வட்டார விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. கோவை மாவட்டம் அன்னூர் வட்டத்தில் உள்ள கணுவக்கரை, ஆம்போதி, செங்கப்பள்ளி மற்றும் சூலூர், சரவணம்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த ஆலங்கட்டி மழை அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகக் கணுவக்கரை மற்றும் ஆம்போதி பகுதிகளில் பெய்த பனிக்கட்டிகள் 38 மணி நேரம் கடந்தும் கரையாமல் இருந்தது ஒரு அரிய வானிலை நிகழ்வாகக் கருதப்படுகிறது.

வேளாண் துறை அதிகாரிகளின் முதற்கட்ட ஆய்வின்படி, அன்னூர் வட்டத்தில் மட்டும் சுமார் 15,000 ஏக்கர் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 30,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் (நேந்திரன் மற்றும் இதர ரகங்கள்) பலத்த காற்றாலும் ஆலங்கட்டியாலும் முறிந்து விழுந்துள்ளன. பாக்கு, தக்காளி, தர்பூசணி மற்றும் கப்பக்கிழங்கு (மரவள்ளிக்கிழங்கு) பயிர்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. ஒரு ஏக்கருக்கு சுமார் ₹2 லட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில், இந்த திடீர் மழையால் விவசாயிகளுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக ஆலங்கட்டிகள் விழுந்த 3 முதல் 4 மணி நேரத்தில் கரைந்துவிடும். ஆனால், இம்முறை மிகக் குளிர்ந்த நிலையில் விழுந்ததால் நீண்ட நேரம் கரையாமல் இருந்துள்ளது. இது போன்ற தீவிரமான பாதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் கோவை மாவட்டத்தில் பதிவாகவில்லை என வேளாண் துறை இணை இயக்குநர் ம.தமிழ்ச்செல்வி தெரிவித்துள்ளார்.
