முடி மாற்று சிகிச்சைக்கு கிடுக்கிப்பிடி... தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு!

 
முடி மாற்று சிகிச்சை ஹேர்

அழகு சாதன சிகிச்சைகள் என்ற பெயரில் தகுதியற்ற நபர்களால் முடி மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முடி மாற்று அறுவை சிகிச்சையை முறையான பயிற்சி பெற்ற தோல் மருத்துவர்கள் அல்லது பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டும். தகுதியற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் இச்சிகிச்சையைச் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படும் கிளினிக்குகளில் முறையான அறுவை சிகிச்சை அரங்கு, போதிய வெளிச்சம் மற்றும் அவசர கால முதலுதவி வசதிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

முடி நேராக்கும் சிகிச்சை

சிகிச்சையின் போது ஏதேனும் ஒவ்வாமை அல்லது பக்கவிளைவுகள் ஏற்பட்டால், உடனடியாகக் கையாளத் தேவையான உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகள் இருக்க வேண்டும். அனைத்து அழகு கலை மையங்களும், மருத்துவமனைகளும் தமிழ்நாடு மருத்துவ நிறுவனங்கள் சட்டத்தின் (Tamil Nadu Clinical Establishments Act) கீழ் முறையாகப் பதிவு செய்திருக்க வேண்டும்.

சமீபகாலமாக முறையான மருத்துவர்கள் இல்லாத கிளினிக்குகளில் முடி மாற்று சிகிச்சை செய்து கொண்ட சிலருக்குத் தீவிர உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, மயக்க மருந்து அளிப்பதில் ஏற்படும் தவறுகள் மற்றும் போதிய சுகாதாரமற்ற சூழலால் உயிரிழப்புகள் வரை நிகழ்ந்துள்ளன. இதனைத் தவிர்க்கவே தமிழக அரசு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

விதிமுறைகளை மீறிச் செயல்படும் கிளினிக்குகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.