சுத்தியலால் மனைவியையும் 7 மாதக் குழந்தையையும் கொன்ற கணவன்... கொடூரம்!
கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் ஆந்த்ரால் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதான ஒன்னூரு சுவாமி. இவருக்கு 24 வயதான ராஜேஸ்வரி என்ற மனைவியும் 7 மாதக் குழந்தையான அஸ்வினியும் இருந்தனர். தம்பதியருக்குத் திருமணமாகி 6 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், கடந்த சில நாட்களாகக் குடும்பத்திற்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஒன்னூரு சுவாமி வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து மனைவியையும் குழந்தையையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார்.
சுத்தியலால் பலமாகத் தாக்கப்பட்டதில் படுகாயமடைந்த ராஜேஸ்வரியும் 7 மாதக் குழந்தையான அஸ்வினியும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இக்கொடூரச் சம்பவத்தை அரங்கேற்றிய பிறகு ஒன்னூரு சுவாமி அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் ஏபிஎம்சி காவல் நிலைய காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். உயிரிழந்த இருவரின் உடல்களையும் கைப்பற்றிய காவல் துறையினர், உடற்கூறாய்வு பரிசோதனைக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே தலைமறைவாக இருந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கக் காவல் துறையினர் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் காவல் துறையினரின் தீவிரத் தேடுதலுக்குப் பயந்து ஒன்னூரு சுவாமி நேராகக் காவல் நிலையத்தில் ஆஜராகி சரணடைந்தார். மனைவியின் நடத்தை மீது ஏற்பட்ட சந்தேகமே இந்தக் கொடூரக் கொலைக்கு முதன்மையான காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல் துறையினர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட சுத்தியலைக் கைப்பற்றி மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.
