போதையில் பயங்கரம்... 22 வயது இளைஞரை நண்பர்கள் சுத்தியலால் அடித்துக் கொலை!
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் 22 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார். கிணத்துக்கடவு பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (வயது 22) என்பவரும் அவரது நண்பரான மாதேஷ் (வயது 22) மற்றும் 16 வயது சிறுவனும் இணைந்து ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. அப்போது அவர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பாக மாறியதை அடுத்து இந்த கோரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
போதை தலைக்கேறிய நிலையில் இருந்த மாதேஷும் அந்த 16 வயது சிறுவனும் தங்களது கைவசம் வைத்திருந்த சுத்தியல் மற்றும் கத்தியை எடுத்து அஸ்வினை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அஸ்வின் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்துச் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததுடன் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் உடனடியாகச் சென்று அஸ்வினின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த கொலைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தலைமறைவாக உள்ள மாதேஷ் மற்றும் 16 வயது சிறுவனைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைத்துள்ளனர். நண்பர்களுக்குள் ஏற்பட்ட மதுபோதை தகராறில் இளைஞர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
