புதிய வைரஸ் பீதி... சொகுசு கப்பலில் 3 பேர் பலி - உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

 
handa handa
 

உலக நாடுகளை உலுக்கிய கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முழுமையாக நீங்காத நிலையில், தற்போது ஹண்டா வைரஸ் பரவல் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினாவில் இருந்து பல்வேறு நாடுகளுக்குச் சுற்றுலா சென்ற எம்வி ஹோண்டியஸ் என்ற சொகுசு கப்பலில் இருந்த பயணிகளுக்கு இந்தத் தொற்று முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. எலிகள் மூலம் பரவக்கூடிய இந்த அபாயகரமான வைரஸ் பாதிப்பால், நெதர்லாந்து தம்பதி உட்பட 3 பயணிகள் கப்பலிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கனாரி தீவு அருகே அந்தச் சொகுசு கப்பல் நிறுத்தப்பட்டு அனைத்துப் பயணிகளும் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். கப்பலில் இருந்தவர்கள் அனைவரும் தங்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு 42 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 11 பேருக்கு இந்தத் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் பாரீஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எலிகளின் கழிவுகள் மற்றும் எச்சில் மூலம் பரவக்கூடிய இந்த ஹண்டா வைரஸைக் கட்டுப்படுத்தச் சர்வதேச அளவில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திடீர் வைரஸ் பரவலால் சுற்றுலா பயணிகள் மற்றும் உலக நாடுகள் மீண்டும் ஒரு சுகாதார நெருக்கடியைச் சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது. நோய் பரவலைத் தடுக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.