வறுமையின் கொடுமை... 2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை!
சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் கடுமையான நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை செய்து கொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள குடியிருப்பு ஒன்றில் தம்பதியினர் தூக்கில் தொங்கிய நிலையிலும், அவர்களது இரண்டு பிஞ்சு குழந்தைகள் படுக்கையில் சடலமாகவும் மீட்கப்பட்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை காலை நேரத்தில் இந்த நெஞ்சைப் பதறவைக்கும் விபரீத நிகழ்வு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உயிரிழந்தவர்கள் கோவிந்த் சாஹு, அவரது மனைவி சஞ்சல் சாஹு மற்றும் அவர்களது இரண்டு குழந்தைகள் என்று காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த கோவிந்த் சாஹு, கடந்த சில மாதங்களாகப் போதிய வருமானமின்றிப் பெரும் மன உளைச்சலில் இருந்துள்ளார். இதனால் அவர் முதலில் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, பின்னர் மனைவியுடன் சேர்ந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மோகன் நகர் காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள், வீட்டை முழுமையாக ஆய்வு செய்தபோது அங்கு ஒரு கடிதம் சிக்கியுள்ளது. அக்கடிதத்தில் தங்களது தீராத பணப் பிரச்சினை மற்றும் குடும்ப அழுத்தங்கள் குறித்துக் கோவிந்த் சாஹு மிக வேதனையுடன் குறிப்பிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்புதான் இந்த குடும்பத்தினர் திருப்பதி கோயிலுக்குச் சென்று வந்துள்ள நிலையில், வறுமையின் கொடுமையால் திடீரென எடுத்துள்ள இந்த விபரீத முடிவு அப்பகுதி மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
