அந்த 4 பேர ச்சும்மா விடாதீங்க... தூக்கில் தொங்கிய படி கணவருக்கு வீடியோ அனுப்பிய அழகுக்கலை நிபுணர் ... அதிர்ச்சி வீடியோ!

 
uttar pradesh

உத்தரப் பிரதேச மாநிலம் எட்டாவா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயதான கோமல் மிஸ்ரா என்ற இளம் அழகுக்கலைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்கொலை செய்து கொள்வதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு தனது கணவர் சௌரபுக்குத் தற்கொலை வாக்குமூல வீடியோ ஒன்றை அலைபேசியில் அனுப்பியுள்ளார். அதில் ருபினா கான், சபினா கான், அபிஷேக் சிங் மற்றும் ரிதேஷ் ராய் ஆகிய 4 பேர் தன்னைத் தொடர்ச்சியாக மிரட்டி மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். திருமணத்திற்கு முந்தையத் தகவல்களைக் கூறி இந்த 4 நபர்களும் சேர்ந்து தனது வாழ்க்கையை முற்றிலுமாகச் சீரழித்து விட்டதாக அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளார்.

இறந்த கோமலின் கணவர் சௌரப் காவல் துறையில் அளித்த புகாரில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் கொண்டு அந்த கும்பல் பணம்பறிக்க முயன்றதாகக் கூறியுள்ளார். போலி வீடியோக்களைக் காட்டித் தொடர்ந்து மிரட்டி வந்ததால் தனது மனைவி கடந்த சில நாட்களாகக் கடும் மன அழுத்தத்திலும் அச்சத்திலும் இருந்து வந்ததாகத் தெரிவித்துள்ளார். வீடியோவைக் கண்டவுடன் பதறியடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடிவந்த சௌரப், தூக்கில் தொங்கிய மனைவியை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளார். ஆனால் அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் கோமல் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தனர்.

கணவருக்கு அனுப்பப்பட்ட வீடியோ மற்றும் புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைப்பற்றப்பட்ட வீடியோ பதிவுகள் மற்றும் அலைபேசி ஆதாரங்களைச் சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் விரிவாக ஆய்வு செய்து வருகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி இளம் பெண்ணைத் தற்கொலைக்குத் தூண்டிய இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.