திருப்பதி மலைப்பாதையில் இருந்த அனுமன் சிலை திருட்டு - மர்ம நபருக்கு வலைவீச்சு!
ஆந்திர மாநிலம் திருப்பதி மலைப்பாதையில் அமைந்திருந்த பழமையான அனுமன் கற்சிலையை நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையேயும் பக்தர்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதிக்கு நடைபயணமாகச் செல்லும் பக்தர்கள், வழியில் உள்ள சிறிய தெய்வச் சிலைகளை வழிபட்டுச் செல்வது வழக்கம். முதலாவது மலைப்பாதையின் 7வது மைல் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய அனுமன் கற்சிலை, செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனது. காலையில் அப்பகுதிக்கு வந்த பக்தர்கள் சிலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாகத் திருப்பதி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்: அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளைக் காவல் துறையினர் ஆய்வு செய்தபோது, நள்ளிரவில் சாமி கும்பிடுவது போல வந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்த அனுமன் சிலையைத் திருடிச் சென்ற காட்சி பதிவாகியிருப்பது தெரியவந்தது. இந்தத் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை அடையாளங்காண காவல் துறையினர் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, அவரை வலைவீசித் தேடி வருகின்றனர்.
