குஜராத் அணியில் மீண்டும் இணைய ஹர்திக் பாண்டியா முயற்சி? பரவும் தகவல்களும் பின்னணியும்!

 
ஹர்த்திக் பாண்டியா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, தனது பழைய அணியான குஜராத் டைட்டன்ஸில் மீண்டும் இணையப் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அவர் விதித்த நிபந்தனையால் அக்கூட்டணி முறிந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் அணியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பின்னடைவுகளுக்கு மத்தியில், ஹர்திக் பாண்டியா தான் 2022 மற்றும் 2023 சீசன்களில் சிறப்பாக வழிநடத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்குத் திரும்ப ஆர்வம் காட்டியதாகக் கூறப்படுகிறது.

ஹர்திக் பாண்டியாவை அணியில் சேர்ப்பதற்குத் தற்போதைய கேப்டன் சுப்மன் கில் மற்றும் அணி நிர்வாகம் தொடக்கத்தில் சம்மதம் தெரிவித்திருந்த போதிலும், "தன்னை மீண்டும் அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும்" என்ற நிபந்தனையை ஹர்திக் பாண்டியா விதித்துள்ளார்.

ஹர்திக் பாண்டியா

சுப்மன் கில்லின் தலைமையில் அணி முன்னேறி வரும் சூழலில், கேப்டன் பதவியை மீண்டும் ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைக்க குஜராத் டைட்டன்ஸ் நிர்வாகம் உடன்படாததால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

ஹர்திக் பாண்டியா நேரடியாக எந்தவொரு ஐ.பி.எல் அணிகளுடனும் வர்த்தகம் அல்லது மாற்றம் குறித்துப் பேசவில்லை என்றும், இது தொடர்பான அணுகுமுறைகள் ஏதேனும் இருந்தால் அவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடமே மேற்கொள்ளப்படும் என்றும் அவரது செய்தித் தொடர்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.