பிறந்தநாளே நினைவு நாளான கொடூரம்... 3 வயது மகளுடன் தம்பதி தற்கொலை!
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்திரத்தில் உள்ள பிரேம் நகர் காலனியில், 3 வயது பெண் குழந்தை மற்றும் அவளது பெற்றோர் தற்கொலை செய்து கொண்ட நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. ஜதிந்தர் குமார் (30), அவரது மனைவி மஞ்சு (28) மற்றும் அவர்களது பச்சிளம் மகள் அத்விகா ஆகிய மூவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ரயில்வே அஞ்சல் சேவையில் பணியாற்றி வந்த ஜதிந்தர், தனது மகளின் நீண்ட கால உடல்நலக்குறைவு காரணமாகக் கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.

விதியின் விளையாட்டாக, அந்தச் சிறுமியின் பிறந்தநாளன்றே இந்த விபரீத முடிவை அந்தக் குடும்பம் எடுத்துள்ளது பலரையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. திங்கட்கிழமை அதிகாலை 5:30 மணியளவில் ஜதிந்தர் தனது மைத்துனருக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவலை அனுப்பியுள்ளார். அந்தத் தகவலைப் பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு விரைந்து வந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பே மூவரும் தூக்கிட்ட நிலையில் உயிரற்றுக் கிடந்தனர்.

உடனடியாகப் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பொம்மைகளும் இனிப்புகளும் நிறைந்திருக்க வேண்டிய அந்த வீட்டில், தற்போது மரண ஓலம் கேட்டு வருவது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகளின் தீராத நோய் பாதிப்பால் ஏற்பட்ட துயரமே ஒரு ஒட்டுமொத்த குடும்பத்தையும் அழித்திருப்பது குருக்ஷேத்திரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
