அமெரிக்காவின் கடல்வழி முற்றுகையால் ஈரானுக்குத் திரும்பிய 21 கப்பல்கள்... மீண்டும் பதற்றம் - ட்ரம்ப் விடுத்த ‘குண்டுவீச்சு’ எச்சரிக்கை!
ஈரான் உடனான அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டுத் துறைமுகங்களை நோக்கிச் சென்ற 21 கப்பல்களை அமெரிக்கக் கடற்படை தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்பியுள்ளது.கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள், ஏப்ரல் 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட 2 வார கால போர் நிறுத்தத்தால் சற்றே தணிந்திருந்தது. ஆனால், பாகிஸ்தானில் நடைபெற்ற 21 மணி நேர அமைதிப் பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படாததால், அமெரிக்கா மீண்டும் தனது பிடியை இறுக்கியுள்ளது.

அமெரிக்கப் பாதுகாப்புப் படை இன்று வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வத் தகவலின்படி அமெரிக்காவின் ஏவுகணைகளைத் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘யு.எஸ்.எஸ். மைக்கேல் மர்பி’ கப்பல் அரபிக்கடலில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
ஈரானியத் துறைமுகங்களுக்குள் நுழைய முயன்ற மற்றும் அங்கிருந்து வெளியேற முயன்ற கப்பல்களை அமெரிக்கக் கடற்படை தடுத்து நிறுத்தியுள்ளது. இதில் 21 கப்பல்கள் அமெரிக்காவின் எச்சரிக்கையை ஏற்று மீண்டும் ஈரானுக்கே திரும்பிச் சென்றுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

"ஹார்மூஸ் ஜலசந்தியின் பாதுகாவலர்கள் நாங்களே. எங்களது அனுமதியின்றி எந்தக் கப்பலும் செல்ல முடியாது" என ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் முற்றுகை தொடர்ந்தால், உரியப் பதிலடி கொடுக்கப்படும் என்றும், ராணுவக் கப்பல்களுக்குத் தடை நீடிக்கும் என்றும் ஈரான் அறிவித்துள்ளது.மறுபுறம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையில், "ஈரான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், முற்றுகையுடன் நிறுத்தாமல் உள்கட்டமைப்பு, மின்சாரம் மற்றும் எரிசக்தி நிலையங்கள் மீது குண்டுகள் வீசித் தாக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
