ஹார்மூஸ் ஜலசந்தியில் வர்த்தகக் கப்பல்களுக்கு அனுமதி... ஈரான் முக்கிய அறிவிப்பு!

 
ஹார்முஸ் ஹார்முஸ்
 

சர்வதேச வர்த்தகப் பாதையில் மிக முக்கியமான இடமாகத் திகழும் ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக அனைத்து வர்த்தகக் கப்பல்களும் செல்ல அனுமதி அளிக்கப்படுவதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்ற ஈரான் அமைச்சர் சையது அப்பாஸ் அராக்சி இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவின் முற்றுகை மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருந்த இந்தப் பாதையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஹார்முஸ் நீரிணை கப்பல் ஈரான்

தங்கள் தரப்பிலிருந்து வர்த்தகக் கப்பல்களுக்கு எந்தத் தடையும் விதிக்கப்படவில்லை என்றும், ஜலசந்தியைப் பயன்படுத்தும் கப்பல்கள் ஈரான் கடற்படையுடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். ஹார்மூஸ் ஜலசந்தி அனைத்து நாடுகளின் வர்த்தகப் போக்குவரத்துக்காகத் திறந்து விடப்பட்டுள்ளதாக அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட தேவையற்ற தடுப்பு நடவடிக்கைகள் நீக்கப்பட்டால், தற்போது நிலவி வரும் சிக்கலான சூழல் விரைவில் முடிவுக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு இந்தப் பாதை மிகவும் இன்றியமையாதது என்பதால், ஈரானின் இந்த அறிவிப்பு வர்த்தக வட்டாரத்தில் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இத்தகைய இணக்கமான முடிவு எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் சர்வதேசக் கடல்சார் வர்த்தகம் எவ்வித இடையூறுமின்றித் தொடர வழிவகை ஏற்பட்டுள்ளது. இந்தப் புதிய நடைமுறைகள் உடனடியாகச் செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.