காமன்வெல்த் ஜூடோவில் தங்கம் வென்று இந்திய வீரர் ஹர்ஷ் சிங் வரலாற்று சாதனை!

 
ஜூடோ ஹர்ஷ் சிங்

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், இந்திய ஜூடோ வீரர் ஹர்ஷ் சிங் ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்று புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆடவர் 60 கிலோ எடைப்பிரிவின் இறுதிப் போட்டியில், இந்தியாவின் 23 வயதான ஹர்ஷ் சிங், ஆஸ்திரேலியாவின் வலுவான வீரரான ஜோஷுவா காட்ஸ்-ஐ எதிர்கொண்டார். ஆரம்ப முதலே கவனமாகவும் சாதுரியமாகவும் விளையாடிய ஹர்ஷ் சிங், சரியான நேரத்தில் புள்ளிகளைக் கைப்பற்றி 10-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய வீரரை வீழ்த்தித் தங்கப் பதக்கத்தைக் தட்டிச் சென்றார்.

"இந்தியாவிற்குத் தங்கம் வென்றது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இந்தத் தங்கப் பதக்கத்தை எனது தாயாருக்குச் சமர்ப்பிக்கிறேன்" என வெற்றிக்குப் பிறகு ஹர்ஷ் சிங் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் வரலாற்றில் இந்தியா ஜூடோ பிரிவில் தங்கம் வெல்வது இதுவே முதல்முறையாகும்.

இதே நாளில் நடைபெற்ற மகளிர் 48 கிலோ எடைப்பிரிவு ஜூடோ போட்டியில், இந்தியாவின் அஸ்மிதா டே (கனடா வீராங்கனையை வீழ்த்தி இந்தியாவிற்கான முதல் ஜூடோ தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்தார்.

அஸ்மிதா டே தங்கப் பதக்கம் வென்ற சில மணி நேரங்களிலேயே, ஹர்ஷ் சிங்கும் தங்கம் வென்று அசத்தியதால், ஒரே நாளில் இந்திய ஜூடோ அணி இரு தங்கப் பதக்கங்களை வென்று தங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டியுள்ளது. இவ்விரு வெற்றிகளின் மூலம் காமன்வெல்த் தொடரில் இந்தியாவின் ஒட்டுமொத்தப் பதக்கங்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது.