30-க்கும் மேற்பட்டோரைக் கடித்த குரங்கு ... கன்னத்தில் அறைந்து, குச்சியால் அடித்த மக்கள்... வைரல் வீடியோ!

 
குரங்கு

 

அரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தின் ஹதின் பகுதியில், 30-க்கும் மேற்பட்டோரைக் கடித்துக் காயப்படுத்தியதாகக் கூறப்படும் குரங்கு பிடிபட்டுள்ளது. தொடர்ந்து மக்களைத் தாக்கி வந்த அந்தக் குரங்கைப் பிடிப்பவர்களுக்கு ரூ.51 ஆயிரம் பரிசு வழங்கப்படும் என நகராட்சி மன்றத் தலைவர் ரேணு லதா அறிவித்திருந்தார். இதையடுத்து, உள்ளூர் மக்கள் அந்தக் குரங்கைப் பிடித்தனர்.

குரங்கு பிடிபட்டதும், அதனை ஒருவர் தோளில் சுமந்து செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகின. அப்போது சிலர் குரங்கை அறைந்தும், குச்சிகளால் தாக்கியும் சென்றதாகக் கூறப்படுகிறது. உயரமான தண்ணீர்த் தொட்டியிலிருந்து குரங்கைத் தூக்கி வீசியதாகக் காட்டும் காணொளியும் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் விலங்குகளைக் கையாளும் முறைகள் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, அப்பகுதியில் குரங்குகளின் தொல்லை தொடர்ந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை மூன்று குரங்குகள் பிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் குரங்குகளைப் பிடிக்கத் தனியார் குழு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் நகராட்சி நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரங்குகளைப் பிடிக்கும்போது பாதுகாப்பான, மனிதாபிமான முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.