குடும்பத் தகராறால் விபரீதம்... 3 குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை!
ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம், கோஹானா அருகே உள்ள முட்லானா கிராமத்தில் தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 38 வயதான ரீமா, அவரது 11 வயது மகள் ரிஹானா, 7 வயது மகள் ஆர்ஜு, 4 வயது மகன் துஷ்யந்த் ஆகியோர் உயிரிழந்தனர்.
அரசுப் பள்ளி ஆசிரியரான ரீமாவின் கணவர் ஜெய்தீப், சனிக்கிழமை பணிக்குச் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பியபோது நால்வரும் உயிரிழந்த நிலையில் இருந்ததைக் கண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
அங்கு இரண்டு பக்கங்கள் கொண்ட கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில் மன உளைச்சல், குடும்பச் சொத்து தொடர்பான பிரச்சினைகள் மற்றும் உறவினர்கள் குறித்த அதிருப்தி இடம்பெற்றுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. தனது கணவர் நிரபராதி என்றும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் ரீமா குறிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளின் உயிரிழப்புக்குப் பின்னர் ரீமா தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். கடிதத்தில் உள்ள தகவல்கள் மற்றும் உயிரிழப்புகளுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
