"அம்பாசமுத்திரத்தில் யாராவது இறந்துவிட்டார்களா?" - நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு!
நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் நிலவும் உள்ளூர் அரசியல் விவகாரங்கள் குறித்துத் திருநெல்வேலியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக இடைதேர்தல்கள் குறித்துப் பேசிய கருத்து அரசியல் வட்டாரங்களில் தற்பொழுது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள தொகுதிகள் மற்றும் அடுத்தடுத்து எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்து வருவது குறித்துப் பேசிய போது, அம்பாசமுத்திரம் தொகுதி குறித்து அவர் எழுப்பிய கேள்வி பொதுமக்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் நயினார் நாகேந்திரன் பேசுகையில், "தமிழகத்தில் அடுத்தடுத்து இடைத்தேர்தல்கள் வரவுள்ளதாகக் கூறுகிறார்கள். அம்பாசமுத்திரத்திலும் இடைத்தேர்தல் வருகிறது என்கிறார்கள். அங்கு (அம்பாசமுத்திரத்தில்) யாராவது இறந்து விட்டார்களா? என்பது எனக்குத் தெரியவில்லை."

தமிழக சட்டப்பேரவையில் காலியாக உள்ள 6 தொகுதிகளில் ஒன்றாக அம்பாசமுத்திரம் உள்ள நிலையில், அத்தொகுதியின் அதிமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த இசக்கி சுப்பையா அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். எம்.எல்.ஏ-க்களின் தொடர் ராஜினாமாவால் தான் இந்தத் தொகுதிகள் காலியாகியுள்ளன என்ற அடிப்படை விபரத்தைக் கவனிக்காமல், "யாராவது இறந்துவிட்டார்களா?" என்று நயினார் நாகேந்திரன் வெளிப்படையாகக் கேள்வி எழுப்பியது விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.
"இடைத்தேர்தல் விவகாரங்களைத் தொடர்ந்து, ஆட்சியில் இருக்கும் தவெக குறித்தும் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிலிருந்து எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வருவதற்குப் பின்னணியில் தவெக-வின் மறைமுக அழுத்தங்கள் இருப்பதாககுறிப்பிட்டார்.
காலியாகும் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களை நடத்தி, குதிரை பேரத்தின் மூலமாகத் தங்களது சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தை அதிகரித்து, தவெக அரசு தங்களது ஆட்சியைத் தக்கவைக்க முயல்வதாக அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
