பரபரப்பு.. மனைவியிடம் பேச வந்த கணவனை கொடூரமாக தாக்கிய பாஜக நிர்வாகி..!!

 
பாஜக நிர்வாகி கைது

பிரிந்து வாழ்ந்து வந்த மனைவியிடம் சமாதனம் பேசி அழைத்து செல்ல வந்த கணவரை பாஜக நிர்வாகி சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் மானியதஅள்ளி பஞ்சாயத்து தலைவராக இருந்து வருபவர் சிவசக்தி (47). பாஜக மாவட்ட துணைத்தலைவராகவும் உள்ள இவருக்கு, ஏற்கனவே திருமணமாகி, மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த தமிழரசி(23) என்ற பெண்ணுடன் சிவசக்திக்கு பழக்கம் ஏற்பட்டது.

தமிழரசிக்கு, ஏற்கனவே அதே பகுதியைச் சேர்ந்த சின்னசாமி மகன் கணேசன்(32) என்பவருடன் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த தமிழரசி, ஒட்டப்பட்டியில் சிவசக்தியுடன் குடும்பம் நடத்தி வந்தார். மேலும், கணேசனுடன் சேர்ந்து வாழ பிடிக்காததால் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்துள்ளார். இந்நிலையில், கணேசன் தனது மனைவியை நேரில் சந்தித்து சமாதானம் பேசி அழைத்துச் செல்லலாம் என முடிவு செய்து, ஒட்டப்பட்டிக்கு கடந்த 31ம் தேதி சென்றுள்ளார். அப்போது, சிவசக்தியுடன் தகராறு ஏற்பட்டது.

உடனே, அவர் 5க்கும் மேற்பட்ட அடியாட்களை வரவழைத்து, கணேசனை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில், படுகாயமடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தப்பியோடிய சிவசக்தி மற்றும் அவரது ஆதரவாளர்களை எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டு தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சிவசக்தி தனது ஆதவாளர்களுடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, எஸ்ஐக்கள் சுந்தரமூர்த்தி, விமல்குமார் தலைமையிலான தனிப்படை போலீசார் ஓசூருக்கு விரைந்து சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு 12மணியளவில் அந்த பகுதியில் பதுங்கி இருந்த சிவசக்தி மற்றும் அவரது ஆதரவாளர்களான மிட்டதின்னஅள்ளி ராஜசேகர்(41), கொளகத்தூர் சரவணன்(35), அஜ்ஜிப்பட்டி சித்தநாதன்(30), காவேரி(44), கம்மம்பட்டி பப்பிரெட்டியூர் சதீஷ்குமார்(41) ஆகிய 6பேரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 6 பேரையும் காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர், அனைவரையும் தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கொம்பேரி பகுதியைச் சேர்ந்த பஸ்வராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web