முன்னாள் ராணுவ வீரர், மனைவி கொடூர கொலை! வீட்டுக்குள் ரத்த வெள்ளத்தில் சடலம்

 
ராணுவம்

 

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரரும், அவரது மனைவியும் வீட்டுக்குள் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹத்ராஸ் மாவட்டம் சதாபாத் பகுதியில் ஆக்ரா பைபாஸ் சாலைக்கு அருகே 58 வயதான ஷம்சுதீன் தனது மனைவி சத்தோ பேகத்துடன் வசித்து வந்தார். ஞாயிற்றுக்கிழமை காலை சுமார் 9.30 மணி ஆகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் குடும்பத்தினரின் உதவியுடன் வீட்டைத் திறந்து பார்த்தனர். அப்போது ஷம்சுதீனும் அவரது மனைவியும் ரத்தக்காயங்களுடன் சடலமாக கிடந்தது தெரியவந்தது.தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தம்பதி கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் குழுவினரும் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இருவரது உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

ஷம்சுதீன் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர் என போலீசார் தெரிவித்துள்ளனர். அவருக்கு இரண்டு மனைவிகள் இருந்ததாகவும், இருவரது வீடுகளிலும் மாறி மாறி தங்கி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவத்தன்று முதல் மனைவியான சத்தோ பேகத்துடன் வீட்டில் இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

Hathras double murder: Retired Army man, first wife found dead in pool of blood at home near Agra bypass

இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவில்லை. கொலையாளிகளை அடையாளம் காணவும், சம்பவத்தின் பின்னணியை கண்டறியவும் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் வீட்டைச் சுற்றியுள்ள CCTV கேமரா காட்சிகளும் போலீசாரால் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.கொலைக்கான காரணம் மற்றும் இதில் தொடர்புடையவர்கள் குறித்த தகவல்கள் விசாரணை முடிவில் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.