"மறந்துட்டீங்களா CM Sir?" - முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி பதிலடி - தமிழக அரசியலில் உச்சகட்ட மோதல்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம், இப்போது சமூக வலைதளங்களில் ஒரு போர்க்களமாகவே மாறியுள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் மற்றும் முன்னாள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இடையேயான நேரடி மோதல், தமிழக அரசியலில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சமீபத்தில் முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில், திமுகவின் கடந்த கால செயல்பாடுகள் மற்றும் தற்போதைய நிலையை விமர்சித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதில் திமுக மக்களால் முழுமையாக நிராகரிக்கப்பட்ட கட்சி என்ற தொனியில் கருத்துக்களை முன்வைத்திருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உதயநிதி ஸ்டாலின் தனது பதிவில் முதலமைச்சர் விஜயை 'CM Sir' என விளித்து, மிகக் காட்டமான கேள்விகளை எழுப்பியுள்ளார். "பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்கள் 'டெய்லி அட்டெண்டன்ஸ்' போட்டுக் கொண்டிருக்கவில்லை" என்று குறிப்பிட்ட உதயநிதி, ஜனநாயக ரீதியாகத் தங்களின் நிலைப்பாட்டை உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் விஜயின் விமர்சனத்திற்குப் பதிலளித்த உதயநிதி, "நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம் என்று சொல்கிறீர்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்கள் இன்று முதலமைச்சராகவே ஆகியிருக்கிறீர்கள். அதை மறந்து விட்டீர்களா CM Sir?" என கேள்வியெழுப்பியுள்ளார்.
கூட்டணி அரசியல் மற்றும் வாக்குகள் சிதறல் காரணமாகவே தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தது என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் உதயநிதியின் இந்த விமர்சனம் அமைந்துள்ளது.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய் எதிர்கொள்ளும் மிக வலுவான அரசியல் விமர்சனமாக இது பார்க்கப்படுகிறது. ஒருபுறம் முதலமைச்சரின் சிறப்புப் பணி அதிகாரி நியமனம் ரத்து செய்யப்பட்ட சர்ச்சை, மறுபுறம் அரசின் கொள்கை முடிவுகள் மீதான எதிர்க்கட்சிகளின் தாக்குதல் என விஜய் அரசுக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.
வழக்கமாகத் திரையுலகில் 'அண்ணா' என்று விஜய்யை அழைத்து வந்த உதயநிதி, இப்போது அரசியல் களத்தில் அவரை 'CM Sir' என அழைத்து விமர்சிப்பது, தமிழக அரசியலில் இனிவரும் காலங்களில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே மிகப்பெரிய வார்த்தைப் போர் வெடிக்கும் என்பதையே காட்டுகிறது.
இந்த சமூக வலைத்தள மோதல், அடுத்த சில நாட்களுக்குத் தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
